Tuesday, August 16, 2011

என்னுடைய நினைவு சரியானதென்றால் அது 1990 ஆம் ஆண்டாக இருக்கும்


எங்களைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது எமக்குத் தெரியவில்லை. தெரிந்தாலும் ஆகக்கூடுதலாக எங்களால் என்ன செய்துவிட முடியும் ஒரு பெருமூச்சு விடமுடியும்…….. அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஒரு கொலைச்சம்பவம் நடந்திருந்தது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்தார்கள். ஆரம்பத்தில் எல்லோரும் அது தற்கொலையென்றே நினைத்திருந்தார்கள். ஆனால் வைத்திய அறிக்கை அது தற்கொலையல்ல அடித்துக் கொன்ற பின்னர் தூக்கப்பட்டிருக்கிறது எனக்கூறியது. யாழ்ப்பாண மக்களிற்கு இது ஒரு அறிக்கையா? தகவலா? துயரா? மர்மமா? விடுப்பா? அல்லது அறிவித்தலா எனக்கேட்டால் எல்லாமும் தான். நாங்கள் இப்படித்தான் வாழ்ந்து பழகிவிட்டோம். யார் மீதும் எங்களுக்கு நம்பிக்கையில்லை எனக்கு நான் உட்பட என்னைச் சுற்றியுள்ள அனைவர் மீதும் சந்தேகம் இருந்துகொண்டேயிருக்கும். உண்மை தெரிந்தாலும் சொல்ல மாட்டோம். சும்மா சாவதற்கு யார் தான் விரும்புவார்கள்……? எங்களுக்கு இன்று நேற்றல்ல நீண்ட வருடங்களாக யார் செத்தார்….? யார் கொன்றார்…? என்னும் கேள்விகள் தொடர்ந்து கொண்டேதான் வருகின்றன………..
என்னுடைய நினைவு சரியானதென்றால் அது 1990 ஆம் ஆண்டாக இருக்கும். ஒரு நாள் நானும் எனது பாடசாலை நண்பர்களுமாகச் சேர்ந்து நகரத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியை பார்க்கப்போயிருந்தோம். அந்தவயதில் அவ்வளவு சுதந்திரமாக சிறுவர்களாகிய எங்களுக்கு மட்டும்தான் ஊர் சுற்றும் வாய்ப்பு இருந்தது. இளைஞர்கள் வீதிகளில் திரிவதே இல்லையென்று சொல்லலாம். காரணம் என்னவென்று இலங்கையரசியல் தெரிந்தவர்களுக்குச் சொல்லத்தேவையில்லை. அன்று விளையாட்டுப்போட்டி முடிய இரவு பதினொரு மணிக்கு மேலாகிவிட்டது. அந்தக்காலங்களில் மின்னொளியில் விளையாட்டு நடத்துவது ஒரு கிராக்கியான விடயம். பார்க்கும் எங்களைப் போன்றவர்களுக்கு அது வரப்பிரசாதம் என்றே கூறலாம். அப்படித்தான் அன்றும் விளையாட்டுப் போட்டியை முழுவதுமாகப் பார்த்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினோம். நகரத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றர் தூரத்தில் எங்களுடைய வீடுகள் இருந்தன. அதிலும் என்னுடைய வீடு பிரதானப் பாதையிலிருந்து உள்ளே வயல்வெளிப்பாதையால் ஒரு கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டும். என்னிடம் சைக்கிளும் இல்லை நண்பர்களின் சைக்கிளில்தான் சென்றிருந்தேன். அவர்கள் என்னைக் கூட்டிப்போகும்போது காட்டிய அக்கரையைத் திரும்பிக் கொண்டே விடுவதில் காட்டவில்லை. நம்பிக்கையை வரவழைத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினேன்…
பாதுகாப்பிற்காக கையில் சிறு கம்பு ஒன்றை எடுத்துக்கொண்டேன். நிலவுக்காலமாகையால் அவ்வளவாக இருட்டு இல்லை. ஓரளவு தூரம் வரை பார்க்கக்கூடியதாக இருந்ததால் பயம் வருவதும் போவதுமாக இருந்தது. நாய்களின் தொல்லைதான் பெரும்தொல்லை. காலடிச்சத்தம் கேட்காமல் நடந்தாலும் எனக்காகக் காத்திருந்துவிட்டு துரத்துவதுபோல் இருக்கும் அவற்றின் செயற்பாடு. ஒரு வகையாக கம்பைச் சுழற்றி என்னைப் பாதுகாத்துக்கொண்டு வீட்டை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தேன். சிறிய பாதைதான் அருகில் ஒரு சிறிய வாய்க்காலும் பாதையோடுகூடவரும். எமதூரின் அதிகமான பாதைகள் இப்படித்தான் இருக்கும். ஏனெனில் குளம் நகரை அண்டியிருந்தது. ஆதலால் வாய்க்காலைத்தொடர்ந்தால் நகருக்குப்போவது இலகுவான வழியென்று ஊர் மக்கள் வாய்க்காளின் கரைகளைப் பாதையாக்கிருக்கக்கூடும். வீட்டிற்குப்போக இன்னும் குறைந்தது இருநூறு மீற்றர் இருக்கக்கூடும். அந்தவிடத்தில் ஒரு ‘சுருசு’ இருந்தது. அதாவது நீரின் வேகத்தைக் கட்டுப்படுத்த அமைக்கப்படும் சீமென்ற் ஒடுக்கி. அருகெல்லாம் பனைகள் அடர்ந்து வளர்ந்திருப்பதால் இயல்பாகவே அந்த இடம் பயத்தை ஏற்படுத்தக்கூடியதே. மனதில் பயத்தோடு சென்று கொண்டிருந்த எனக்கு நிலவின் வெளிச்சத்தில் வாய்க்காலுக்குள் ஒருவர் படுத்திருப்பது தெளிவாகத்தெரிந்தது. உடனடியாகவே கத்திக்கொண்டு பின்னோக்கி ஓடினேன். கொஞ்சதூரம் ஓடிவிட்டு நின்று பார்த்தேன் அவர் அப்படியே படுத்திருந்தார். என்ன செய்வதென்று புரியவில்லை. போகவிருக்கும் தூரத்தைவிட திரும்பியோடவிருக்கும் தூரம் மிக மிக அதிகமானது. ஆகையால் மனம் வீடு நோக்கிப் போவதையே விரும்பியது. ஊரில் குடிகாரர்களின் தீர விளையாட்டும் இந்த வகையானதுதான். ஒரு வேளை யாரோ குடித்துவிட்டு விழுந்து கிடக்கலாம் என்பதை நான் எனக்குச் சாதகமாக்கிக் கொண்டு திரும்பவும் மெதுவாக அவரிடத்தில் சென்றேன். செல்லும்போது அனைத்து வகையான குடிகாரர்களின் பெயர்களைச் சொல்லிக் கூப்பிட்டவாறே சென்றேன். என்ன துணிச்சலோ தெரியவில்லை. கிட்டப் போனதும் படுத்திருந்தவரை உற்றுப்பார்த்தேன். படுத்திருப்பவர் ஆணல்ல பெண். ஒரு சிறுவன் பயம் கொள்வதற்குரிய நேரமோ, சம்பவமோ இந்த உலகில் இதைவிட வேறு இருக்குமென்று எனக்கு இன்றுவரை தோன்றவில்லை. திரும்பிப் பார்க்காமல் வீட்டைநோக்கி ஓடினேன்.
நான் வந்திருந்த நிலமையைவிட வீட்டு நிலமை இன்னும் மோசமாக இருந்தது. என்னிடம் இருக்கக்கூடிய முழு சக்தியையும் திரட்டிக் கத்தியும் யாரும் வெளியில் வருவதாக இல்லை. கதவோடு ஒட்டிநின்று திரும்பிப் பார்த்தபோது மூன்றாவது வீட்டில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. எதைப்பற்றியும் யோசிக்காமல் உடனடியாக அங்கே ஓடினேன். ஓடும்போது பாதையொரு தேவையாகவே இருக்கவில்லை என்பதை இப்போது நினைத்தால் சிரிப்பு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. அங்கும் போய் அதே மாதிரிக் கத்திக் கூப்பிட்டேன். உடனடியாகக் கதவைத்திறந்துகொண்டு சித்தி வெளியில் வந்து ‘கத்தாதடா நாயே’ பேசாமல் உள்ளே வா என்றார். நான் சித்தி ஏன் இங்கு நிற்கிறார் என்னும் குழப்பத்தோடு உள்ளே சென்றேன். அங்கு பார்த்தால் என்னுடைய குடும்பமே இருந்தார்கள். நான் ஏன். இங்கு இருக்கிறீர்கள் என்று கேட்பதா..? நடந்தவற்றைச் சொல்வதா..?என்று யோசிக்கும் சிறு இடைவெளியில் அண்ணன் என்னை அடித்துப் பிண்ணிவிட்டார்.. இப்படித்தான் அதைச் சொல்லமுடியும். அண்ணன் என்னை உடனடியாகப் படுக்கும்படி கூறினார் நானும் ஒன்றும் பேசாது படுத்துவிட்டேன். ஆனால் நடந்தவற்றை அவர்களிடம் கூறவேண்டும். அதைவிட இவர்கள் ஏன் இங்கு வந்து படுத்திருக்கிறார்கள் என்பதை அறியவேண்டும். மனம் பதறிக்கொண்டிருந்தது. இரவு நித்திரையே கொள்ளாமல் விழித்துக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட எல்லோரும் அதேநிலமைதான். அங்கு படுத்திருந்தவர்கள் ஆளுக்கு ஒரு சொல்லாக இடையிடை கதைத்தார்கள் அது இப்படித்தான் இருந்தது. “மூன்று நான்கு வெடிச்சத்தம் கேட்டது……..வெடி கேட்க முன்னர் குழறிக்கேட்டது…….பொம்பிளை கத்தின சத்தம்தான் அது….. ஆம்பிளையும் கத்திக் கேட்டது…… உந்த ஒழுங்கைக்கதான் விசயம் நடந்திருக்கு……” இப்படி உதிரியான சொற்களில் இருந்து நான் ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். ஆனால் எனக்கு அங்கு வாய் திறக்கும் அதிகாரம் தரப்படவில்லை.
மறுநாள் காலையில் ஆளுக்கு முந்தி இரவு நடந்தவற்றை எல்லோரிடமும் கூறினேன். காலை பத்து மணியளவில் ஊரில் இருக்கக்கூடிய அனைவருமே குறிப்பிட்ட இடத்தில் கூடிவிட்டார்கள். ஒரு வியப்பான சம்பவம் அங்கு காத்திருந்தது. வாய்க்காலில் கிடங்கு வெட்டி அதற்குள் பிணத்தை யாரோ புதைத்திருந்தார்கள் கிடங்குக்கு வெளியில் புடைவையின் மிகுதிப்பகுதி தெரிந்துகொண்டிருந்தது. ஊர் மக்கள் அனைவருமே பயத்திலும் அடுத்தது என்ன செய்வதென்று தெரியாமலும் உறைந்துபோயிருந்தார்கள். ஒரு வழியாக கிடங்கைத் தோண்டி பிணத்தை வெளியே எடுப்பம் என மாலை ஒரு மணியளவில் முடிவுக்கு வந்தார்கள். மெதுமெதுவாக வேலை ஆரம்பமாகியது கிடங்கு அவ்வளவு ஆழமில்லையாதலால் விரைவாக வேலை முடிந்தது. பிணத்தைத் தூக்கி மேலே வைத்துவிட்டு அனைவரும் தங்களுக்கான பேச்சுக்களை ஆரம்பித்தார்கள். சுமார் நாற்பது தொடக்கம் நாற்பத்தைந்து வயதிருக்கும் மெல்லிய வளர்ந்த பெண் முன் பல்லுகள் வெளியில் தள்ளியிருந்தன. சுமாரான நிறம் சிவப்பு நிற சேலை அணிந்திருந்தார். காதிலும் நெற்றியிலும் சுட்டிருக்கிறார்கள் ரத்தம் வழிந்த இடங்களில் மண் ஒட்டியிருந்தது. கூட்டத்திலிருந்த ஒரு பெண் சொன்னார் காலையில் இந்தப்பெண்ணை வைத்தியசாலையில் கண்டதாக இன்னொருவர் சொன்னார் தினமும் இவரை பஸ்ஸில் காண்பதாக ஆனால் இவர்கள் யார் கூறியதிலும் உண்மையிருப்பதாக நம்பத்தேவையில்லை என்பதை நான் அப்போதே அறிந்திருந்தேன். காரணம் அவர்கள் அதிகப் பிரசங்கிகள், பொய் பேசுவதில் தேர்ச்சிபெற்றவர்கள்.
யாராவது ஊரில் உள்ளவர்களிடம் வாகனம் இருந்தால் பிணத்தை வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லாம் என முடிவெடுத்து ஆளுக்கொரு பக்கமாக வாகனத்தைத் தேடிச்சென்றார்கள் சிலர். ஒரு மணித்தியாலத்திற்குப் பிறகு கார் ஒன்று வந்து சேர்ந்தது எல்லோரும் பிணத்தை ஏற்றுவதற்கு ஆயத்தம் செய்துகொண்டிருக்க கூட்டத்திலிருந்த யாரோ ஒருத்தர் “பிணத்தைக்கொண்டு போறியள் இதற்கு யாராவது ஒராள் கூடப்போய்ப் பாரம் குடுக்க வேண்டும். யார் போறது என்று கேட்டார்…? அவ்வளவுதான் ஒருத்தர்கூட முன்வரவில்லை. அது மட்டுமல்லாமல் கார்க்காரரும் தனக்கும் இது பிரச்சினை என்று கூறிவிட்டுப் போய்விட்டார். எல்லோருக்கும் மீண்டும் என்ன செய்வதென்று தெரியாமல் ஒருவர் பின் ஒருவராக இடத்தைவிட்டு நகரத்தொடங்கினார்கள். நான் நினைக்கிறேன் எங்கள் குடும்பத்தார்கள்தான் அந்த இடத்தைவிட்டு இறுதியாகச் சென்றவர்களாக இருப்போம். முதல் நாள் போன்றே அயலவர் வீட்டில் அன்றைய இரவும் பயத்துடன் எனக்கு முடிந்தது. மறு நாள் காலையிலும் ஒரு அதிசயம் எல்லோருக்கும் காத்திருந்தது. அது வேறொன்றுமல்ல குறிப்பிட்ட இடத்தில் பிணத்தைக் காணவில்லை.
சுட்டவர்களே பிரச்சனையை அறிந்துவந்து பிணத்தைக் கொண்டுபோயிருக்கலாம் என எல்லோரும் நம்பினார்கள். எப்படியோ விசயம் பிரச்சினையில்லாமல் முடிந்ததிலும் பிணம் இல்லாமல் போனதால் ஊரில் பயம் நீங்கியதும் ஒரு வகையில் நிம்மதியாக இருந்தது. ஆனால் மனதில் ஏற்பட்ட உறுதியான பயப்பீதி தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. யார் அந்தப்பெண்…? ஏன் சுட்டார்கள்….? சுட்டவர்களுக்கும் அந்தப்பெண்ணுக்கும் என்ன பிரச்சினை இருந்திருக்கும்….? சம்மந்தப்பட்ட பெண்ணின் உறவுடையவர்கள் இன்றுவரை அவர் இறந்ததை அறிந்திருப்பார்களா…? இப்படியான கேள்விகளோடும் அதற்கான பதில்களை அறிந்துகொள்வதற்கு முயலாமல் இருப்பதுவும் தான் ஒரு சாதாரண ஈழத்தமிழனாக வாழ்வதில் உள்ள முழுப்பயனுமாக இன்று வரை இருக்கிறது. தூக்கில் தொங்கினால் என்ன சுடப்பட்டால் என்ன நாம் ஈழத்தமிழர்கள் என்னும் பெருமையோடு செத்துத்தொலைவோம்.

0 comments:

Post a Comment