Saturday, September 24, 2011

தாகூர்


தாகூர் தனது லொறியை இன்னும் வேகமாகச் செலுத்துவதற்கு
முயன்றுகொண்டிருந்தார். ஆனால் வீதியில் காணப்படும் பள்ளங்களும் மேடுகளும் அவரது முயற்சியை சாத்தியமற்றதாக்கிக்கொண்டிருந்தன. அவருக்கு நன்றாகத்
தெரியும், இருட்டிவிட்டால் வீடு போய்ச்சேர்வதென்பது முடியாத
விடயமாகிவிடும். இப்பொழுதே நேரம் மாலை ஆறுமணியைத் தாண்டிவிட்டது.
லொறியில் லைட்டும் இல்லை. எப்டியாவது இருட்ட முன்னர் போய்ச் சேர்ந்து
விடவேண்டும் என்பதில் தன் கவனம் எல்லாவற்றையும் குவித்திருந்தார் தாகூர்.
லொறியில் கொஞ்சம் அதிகமாக மூடைகள் ஏற்றியிருப்பதால் வீதி நெடுகிலும்
லொறியின் புகை நிரம்பி, வருவோர் போவோரை சிரமப்படுத்திக்கொண்டிருந்தது.
தாகூருக்கும் இந்தப் பிரச்சினை தெரிந்தேயிருந்தது. என்னசெய்வது…..?
தன்னுடைய முதலாளியிடம் தாகூரும் கூறியிருக்கிறார். ஆனால் நாளை
பார்ப்பம்…நாளை பார்ப்பம் என்று நாட்கள் தான் போகிறதே தவிர லொறியைத்
திருத்திய பாடில்லை. லொறியினுடைய எஞ்சின் சூடு நெருப்புக்குள் இருப்பது
போன்று இருந்தது. இதற்கிடையில் உடைந்த மூடைகளில் இருந்து கிளம்பிய தூசு
தாகூரை மூடிக்கொண்டிருந்தது. அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. வாய்க்கு
வந்தபடி ஏதோவெல்லாம் திட்டிக்கொண்டே வந்தார்.
வீதியின் நடுவில் ஒரு சிறுவன் மாடுகளை விரட்டியபடி செல்வது தாகூருக்குத்
தெரிந்தது. தாகூர் கோர்ணை விடாமல் அடித்துக்கொண்டு வந்தார். இவருடைய
அவசரத்திற்கு சிறுவன் விலகிப் போகவில்லை. வேறு வழியில்லாமல் லொறியின்
வேகத்தை நன்றாகக் குறைத்து விட்டார். இனி வந்த வேகத்தை எட்டுவதென்றால்
எல்லாக்கியரையும் முதலிலிருந்து போடவேண்டும். தாகூருக்குக் கோவம் தாங்க
முடியவில்லை. சிறுவனை விலத்தும் போது ஒருக்கால் எட்டிக் கெட்ட
வார்த்தைகளால் திட்டித்தீர்த்தார். இவருடைய கோவத்தையோ, திட்டல்களையோ
சிறுவன் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.
மீண்டும் மெது மெதுவாக லொறி வேகம் பிடித்தது. இப்போது தாகூருக்கு ஓரளவு
லொறியின் வேகம் மனதுக்குப் பிடித்திருந்தது. முகத்தில் ஒரு சிறிய
சந்தோசம். பருத்தித்துறை வீதியிலிருந்து கோண்டாவிலுக்குத் திரும்பும்
சந்தியான இருபாலைச் சந்தியை அடைந்து விட்டார். இன்னும் இருபது
நிமிடத்தில் போய்ச்சேர்ந்து விடலாம். சூரியனும் முழுவதுமாக
மறைந்துவிட்டது. ஆனால் வெளிச்சம் மிச்சமாக இருக்கிறது.தாகூருடைய
யோசனையெல்லாம் திருநெல்வேலிச் சந்தியில் இருக்கும் சாராயக்கடையையே
சுற்றிக்கொண்டிருந்தது. சாரயக்கடையை ஏழுமணிக்;கும் எட்டு மணிக்குமிடையில்
எந்த நேரத்திலும் பு+ட்டிவிடுவார்கள். அதற்கிடையில் போய்ச்சேரவேண்டும்.
லொறியை கோண்டாவில் உணவுக்களஞ்சியத்தில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து
அவருடைய பழைய சைக்கிளில்தான் தாகூர் வீட்டிற்குச் செல்வது வழக்கம்.
அப்படிச் செல்லும்போது ஒரு நாள் கூட சாராயக்கடைக்குப் போகாமல்
இருக்கமாட்டார். தாகூரிடம் ஒரு நல்ல பழக்கமும் இருக்கிறது. சாராயக்
கடையில் அவர் குடிப்பதில்லை. சாரயத்தை வீட்டிற்கு வாங்கிச் சென்று
தனிமையில் குடிப்பது ஓர் இனம் புரியாத சுகத்தை அவருக்குத் தருகிறது. இது
தவிர ஆட்களோடு கூடிக் குடிப்பதால் பிரச்சினைகள் அதிகம் ஏற்படும்
என்பதையும் வீணான செலவு ஏற்படும் என்பதையும் அவருடைய நீண்டகாலக் குடி
அநுபவத்தில் தெரிந்திருந்ததும் ஒரு காரணம்.
லொறி கோண்டாவில் சந்தியை நெருங்கி விட்டது. லொறியின் வேகத்தை நன்றாகக்
குறைத்துக்கொண்டார். பலாலி வீதியின் இரண்டு பக்கத்தையும் எட்டிப்
பார்த்தார். ஒரு மோட்டார் சைக்கிள் மாத்திரம் பலாலி வீதியில் நெருங்கி
வந்து கொண்டிருந்தது. மோட்டார் சைக்கிள் சந்தியைக் கடக்குமட்டும்
பொறுத்திருந்து விட்டுப் பின்பு லொறியை எடுத்தார். என்னவாயிற்றோ
தெரியவில்லை. சந்தியைக் கடக்கும் முன்னரே லொறி நின்று விட்டது.
தாகூருக்கு நெஞ்சு பட படக்கத் தொடங்கி விட்டது. அவருக்குத் தன்னுடைய
தவறால்தான் லொறி நின்று விட்டது என்பது நன்றாகத் தெரிந்து விட்டது.
உடனடியாக லொறியிலிருந்து கீழே இறங்கிவிட்டார். நீண்ட நேரமாக
உட்கார்ந்திருந்ததால் அவரால் நிமிர்ந்து நிற்க முடியவில்லை. நாரியைப்
பிடித்தபடியே அருகிலிருந்த கடைப்பக்கம் வேகமாய் நடந்தார். அந்தக் கடையில்
இரண்டு மூன்று பேர் கதைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ‘தம்பியவை
குறை நினையாமல் லொறியைக் கொஞசம் தள்ளிவிடுங்கோ ஸ்டார்ட் நிண்டு போச்சு,
ஓடிவாங்கோ றோட்டுக்குக் குறுக்க நிக்குது’ என்று கெஞ்சினார். முதுகில்
தடவி அவர்களை அவசரப்படுத்தினார். தாகூருடைய நிலையைப் பார்த்தவர்கள்
உடனடியாகவே உதவிக்கு முன் வந்தார்கள். அதற்கிடையில் வாகனங்கள் பலாலி
வீதியில் வரிசையாக வந்து நிற்கத் தொடங்கிவிட்டன. மினிவான் ஒன்றிலிருந்து
ஒருவன் இறங்கி வந்து தாகூரைத் திட்டத்தொடங்கினான்.
ஏதோ ஒரு வழியாகப் பத்துப் பதினைந்து பேர் சேர்ந்து லொறியைச் சந்தியைக்
கடக்கும் வரை தள்ளிவிட்டார்கள். அப்படியிருந்தும் லொறி ஸ்ட்டார்ட்
வரவில்லை. தாகூர் அந்த இடத்திலிருந்து லொறியை எடுத்துச் செல்வதற்குப்
படாத பாடு பட வேண்டியதாகிவிட்டது. மோட்டார் சைக்கிள் திருத்தும்
கராச்காரனின் உதவியோடு ஸ்ட்டார்ட்டை வரப்பண்ணி அந்த இடத்தை விட்டுப்
புறப்பட்டார். ‘சீ என்ன மயிரு வாழ்க்கை எத்தனை பேரிடம் திட்டு வாங்க
வேண்டி வந்திட்டுது நாளைக்கே இந்த லொறியை விட்டு இறங்கி விடவேண்டும்.’ என
மனதுக்குள் சலிப்போடும் களைப்போடும் நினைத்துக் கொண்டார்.
தாகூர் இப்படி நினைப்பது இது ஒன்றும் முதல் தடவையல்ல. லொறி ஓட்டுணராக ஆன
இந்தப் பதினைந்து இருபது வருடங்களில் அடிக்கடி இப்படித்தான் நினைத்தும்
பலரிடம் கூறியும் இருக்கிறார்.
கோண்டாவில் உணவுக்களஞ்சியத்தில் தாகூர் ஒருவாறு லொறியைக் கொண்டுவந்து
நிறுத்திவிட்டார். ஆனால் உரிய இடத்தில் அவரால் லொறியை
நிறுத்தமுடியவில்லை. இன்னும் சற்றுநேரத்தில் ஆளையாள் தெரியாத
இருட்டாகிவிடும். ஓட்டமும் நடையுமாகச் சென்று தனது நிலமையைக் காவலாளரிடம்
கூறிவிட்டுக் களஞ்சியத்தின் ஓரமாக நின்ற சைக்கிளை எடுத்துக் கொண்டு
வெளியேறினார்.
சைக்கிளின் பின் ரயருக்குக் காற்றுப் போதுமானதாக இருக்கவில்லை. அது
எப்போதும் அப்படித்தான் இருக்கும். இருட்டுப் பற்றிய யோசனை ஒரு பக்கம்
இருக்க, சாராயக்கடை பற்றிய இன்ப நினைவால் சைக்கிளை வேகமாக
ஓட்டத்தொடங்கினார். மத்தியானம் ஒரு துண்டுப் பாணைத் தவிர வேறு ஒன்றும்
சாப்பிடாமையும் உடம்பலுப்பும் சேர்ந்து அதிகமான சோர்வை தாகூருக்குக்
கொடுககத்; தொடங்கியது. ‘வயதாகி விட்டதால் இதெல்லாம் ஏற்படுவது வழமை
தானே.’ வைராக்கியத்தை ஏற்படுத்திக் கொண்டு தாகூர் போய்க் கொண்டிருந்தார்.
சற்றுத்தொலைவில் வீதிக்குக் குறுக்காக ஒரு ஆள் அமர்ந்திருப்பதைக்
கண்டார். உடனடியாகவே சைக்கிளின் வேகத்தைக் குறைத்து அருகில் சென்றவுடன்
அழுகைச் சத்தமும் கேட்டது. யாரது என்றார்? பின்பு தாகூர் கூர்ந்து
பார்த்ததில் அது ஒரு பெண் என்பதை அடயாளம் கண்டுவிட்டார். சைக்கிளை
விட்டிறங்கி யார் நீ?... ஏன் றோட்டிலிருந்து அழுகிறாய் என்று கேட்டார்?
அவள் பதில் கூறாமல் அதற்குப்பிறகுதான் இன்னும் அதிகமாக அழத்தொடங்கினாள்.
தாகூருக்குக் கோவம் தான் வந்தது. ‘ஏய் கேட்கிறது
விளங்கவில்லையே?......என்ன கறுமத்திற்கு றோட்டில் கிடந்து அழுகிறாய்..?
எழும்பிப் போய் கரையில் இருந்து அழவேண்டியது தானே..? மனுசன் வாற
களைப்பில் இது வேற……’என்று அலுத்துக் கொண்டே சைக்கிளை வீதியின் கரைக்கு
உருட்டினார்.
அந்தப் பெண் ‘ஐயா கொஞ்சம் நில்லுங்கோ, உங்காலயே போறியல் நானும் வாறன்’
என்றாள் அழுதவாறே ……தாகூருக்கு எரிச்சல் தான் வந்தது. ‘நான் தூரப்போறவன்
நீ வேறு யாரயாவது பார்த்துக்கொள் என்றார்.’ ‘ஐயா கும்பிட்டுக் கேட்கிறன்
நில்லுங்கோ’ என்றாள். தாகூருக்கு மனசில் ஏதோ சுருக்கென்றது……… ‘நீ எங்க
போகவேணும்….’ எனக்கேட்டார்? ‘நான் செம்மணிப் பக்கம் போகவேணும். நீங்கள்
போற தூரம் மட்டும் என்னைக் கொண்டு போய் விட்டுவிடுங்கோ’ என்றாள்.
அதற்குத் தாகூர் இவ்வளவு நேரமும் இஞ்ச என்ன செய்தனி…? ஏன் நடு றோட்டில்
கிடந்து அழுகிறாய்…?புருசனோட சண்டையோ….? பிள்ளைகளில்லையோ…..? ஏதாவது
வருத்தமோ…..?’ என்றவாறு தாகூரின் கேள்விகள் அடுக்கப்பட்டுக் கொண்டிருக்க
எல்லாக் கேள்விகளிற்கும் அவளிடமிருந்து நிதானமாக விடை
கிடைத்துக்கொண்டிருந்தது….. சற்று நேரம் இருவரும் ஒன்றும் பேசாமல்
தலையைக் குனிந்தபடி நடந்து சென்றனர். ‘விரிவான உரையாடல் எதிரியையும்
பல்வேறு சந்தர்ப்பங்களில் நண்பனாக்கும் சாத்தியம் உள்ளதைப்போல.’
தாகூர் மெதுவாக சைக்கிளில் ஏறினார். அந்தப் பெண்ணையும் சைக்கிளின்
பின்னால் ஏற்றிக் கொண்டார். சைக்கிள் தள்ளாட்டத்துடன் ஓடத்தொடங்கியது.
தாகூர் தன் பார்வைக்குறைபாடுபற்றியும் முன் கூட்டியே அவளிடம்
சொல்லிவைத்தார். இப்போது தாகூருக்குப் பாதைகாட்டியாக அந்தப் பெண்
மாறியிருந்தாள். சில இடங்களில் தாகூரால் சைக்கிள் ஓடமுடியாமல் போகும்
போது நிறுத்திவிடுவார். ஆனால் அவளை சைக்கிளை விட்டு இறங்க வேண்டாம் என்று
சொல்லுவார். ‘என்னதான் இருந்தாலும் தாகூருக்கு வைராக்கியம் அதிகம்தான்.’
தாகூரின் தொழிலைப்பற்றி அந்தப் பெண் விசாரித்தாள். தாகூர் தனது லொறி
ஓட்டும் தொழிலைப்பற்றிச் சொன்னார். மிகுந்த சிரமத்தின் மத்தியில்; இன்று
தான் வந்து சேர்ந்ததையும் சொன்னார். அப்படிச் சொல்லும் போது இடைக்கிடை
சிரித்தும் கொண்டார். ‘ஏன் இந்த வயதிலும் உழைக்கிறீர்கள் பிள்ளை குட்டி
இல்லையோ….?’ என்று அவள் கேட்டாள்? சில வினாடிகள் அங்கு மௌனம் நிலவியது.
பிறகு தாகூர் பேசத்தொடங்கினார்.
‘எனக்கு உறவுகள் என்று சொல்வதற்கு இப்போது யாரும் இல்லை. தேவையும்
இல்லை. உடம்பில சத்திருக்கும் மட்டும் உழைப்பம். ஏலாத காலத்தில ஒரு
மடத்தில போய் விழவேண்டியதுதான்;’. தாகூர் பேசும்போது அதிகம்
உணர்ச்சிவசப்படுபவராக இருந்தார். அதன் அர்த்தம் எதிர்மறையானது. உறவுகள்
தனக்கு இல்லையே என்பதன் வெளிப்பாடுதான். ‘நான் இருபத்தியெட்டு வயசில
கலியாணம் செய்தனான். பதினேலு வருசம் சீமாட்டியோட ராஜ வாழ்க்கை
வாழ்ந்தனான் பிள்ள. அவள் வருத்தம் வந்து செத்த பிறகு என்னுடைய வாழ்க்கை
தெருவுக்கு வந்திட்டுது. எனக்கு மூன்று பிள்ளைகள். மூன்றும் பெடியள்தான்.
என்ன செய்வது குடுத்து வைக்கவில்லை. ஒருத்தன் இயக்கத்திற்குப் போன சில
நாட்களிலேயே இறந்து போனான். மற்றவனை எங்கட வீட்டு வாசலிலேயே கண்ணுக்கு
முன்னால் யாரோ சுட்டுக்கொன்றார்கள். கடைசி மகனை பெரிய கஸ்ட்டப் பட்டுப்
படிக்க வச்சன். அவனுக்குச் சரியாகப் படிப்பு வரவில்லை. இங்க இருந்தால்
உயிரோட விடமாட்டார்கள் என்று, கடன் பட்டு அவனை சுவிசுக்கு அனுப்பினன்.
கொஞ்சக்காலம் அடிக்கடி கதைச்சான் காசும் அனுப்பினவன். பிறகு அவனுக்கு
என்ன நடந்ததோ தெரியவில்லை. எப்ப பார்த்தாலும் வேலையில்லை…வேலையில்லை
என்று சொல்லுவான். அவ்வளவுதான் இப்ப எங்க இருக்கிறான் என்றே தெரியவில்லை.
நானும் கும்பிடாத கடவுள் இல்லை’……தாகூர் பெருமூச்சு விட்டார். சைக்கிள்
ஓடுகிறதா நிறகிறதா என்று தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தது.
‘ஏன் நீங்கள் பிறகு வேற கலியானம் செய்திருக்கலாம் தானே? இவ்வளவு காலமும்
தனியக் கஸ்ட்டப் பட்டிருக்கிறியள்’ என்று கேட்டாள் அவள். கேட்கும் போதே
மூக்கைச் சீறிக்கொட்டினாள். அவள் அப்படிச் செய்யும் போது அடிக்கொரு தரம்
அவளுடைய கைகள் தாகூரில் பட்டது. தாகூருக்கு உடம்பில் சிறு மாற்றம்
அவ்வப்போது ஏற்பட்டது. ‘அப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று எனக்கு
அப்போது தோன்றவில்லை. இப்படியொரு கஸ்ட்டம் வருமென்று முன்பே
தெரிந்திருந்தால் கட்டாயம் செய்திருப்பன். மனுசருடைய வாழ்வு எப்போது
எப்பிடி மாறுமென்று யாருக்குத் தெரியும்….’? என்றார் தாகூர்.
‘எனக்கு அந்தக் காலத்தில் எத்தனையோ கலியாணம் பார்த்தும் ஒன்றும்
பொருந்தி வரவில்லை. மீறி வந்தவர்களும் சீதனம் அதிகமாகக் கேட்டார்கள்.
அப்பா பிடிவாதக்காரர் ஒன்றுக்கும் உடன்படவில்லை. எனக்குக் கடைசிவரை
கலியாணம் சரிவரவேயில்லை.’ என்று அவள் கூற ‘ஏன் யாரையாவது கூட்டிக்கொண்டு
ஓடாமல் விட்டாயே…’? என்று சொன்னார் தாகூர். அவளும்;;; ஏற்றுக் கொண்டது
போல் தலையாட்டிவிட்டு ‘எனக்கு அப்படியாவது ஒரு சனியன் வந்து
தொலையவிலிலையே இப்ப நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது’ என்றாள்.
தாகூர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ‘இப்ப உனக்கு என்ன வயதாகிறது’ என்று
கேட்டார்? அவர் கேட்டு முடிக்கும் முன்பே அவள் ‘ஐம்பத்தி நான்கு’
என்றாள்.
சைக்கிள் ஒரு பெரிய ஒரு பள்ளத்தில் விழுந்தது. இருவரும்
இறங்கிவிட்டார்கள். ‘நடந்து போவமே’ என்று கேட்டாள் அவள். தாகூர் அதற்குச்
சம்மதிப்பவர் போல் தெரியவில்லை. தான் இப்போது எந்த இடத்தில் நிற்கிறேன்
என்று சுற்றும் முற்றும் பார்த்தார்.கொக்குவில் பொற்பதிச்
சந்திக்கு அருகாமையில் வந்து விட்டோம் என்பது தெரிந்தது. ‘பரவாயில்லை
பின்னுக்குக் கொஞ்சம் காற்றுக் காணாது நீ வந்து முன்னுக்கு
ஏறிக்கொள்கிறாயா’ எனக் கேட்டார் தாகூர்? அவள் மறுப்புக்கூறவில்லை
ஏறிக்கொண்டாள். முன்பை விட தாகூருக்கு இப்போது தான் சைக்கிள் ஓடுவது
கடினமாக இருந்தது. காட்டிக் கொள்ளாமல் சமாளித்தார். அவரது வலது கால்
அவளது தொடையின் பின் புறத்தில் உரசத் தொடங்கியது. தாகூருக்குச்
சங்கடமாகவும் அதேநேரம் தவிர்க்கமுடியாமலும் இருந்தது. ஆனாள் அவள் இதை ஒரு
பொருட்டாகத்தானும் எண்ணாதது போல் இருந்தாள். பின்பு தாகூரும் பழக்கப்
பட்டுவிட்டார்.
சைக்கிள் திருநெல்வேலிச் சந்தியை நெருங்கிக் கொணடிருந்தது. தாகூருக்கு
எண்ணற்ற நினைவுகள் வந்து போயின. அவருடைய மனைவி இறந்த பின்னர் வாழ்ந்து
வந்த கடந்த இருபத்தியைந்து வருடவாழ்வில் இன்று தான் அதிக சந்தோசம்
கொள்வதாக உணரத்தொடங்கினார். அதற்கு என்ன காரணம் என்பது தாகூருக்குப்
புரியத் தொடங்கிவிட்டது.
குனிந்து அவளது காதருகில் ‘இப்போது வீட்டில் யாரும் உன்னைத் தேட
மாட்டார்களா’ என்று கேட்டார்? ‘யார் தேடுவது…? என்னை நான்தான்
தேடவேண்டும்’ என்று கூறிக்கொண்டே சிரித்தாள். தாகூருக்கு மனதில் பல்வேறு
நினைவுகள் தோன்றி மறைந்தன. சிலவற்றைப் பேசிவிடவேண்டும் என்று
வாயெடுத்தார் ஆனால் பேசவில்லை. தாகூருடைய இரண்டு கைகளும் அவளுடைய
உடம்பில் முட்டியும் முட்டாமலும் இருந்தன. சைக்கிள் இப்போது தாகூரின்
திருநெல்வேலிச் சாராயக் கடையைக் கடந்து சென்று கொண்டிருந்தது. தாகூருக்கு
அது பற்றியெல்Aலாம் இப்போது அக்கறையில்லை. அவளிடம் கேட்டுவிடுவோம்….
கேட்டுவிடுவோம் என்று நினைப்பதும் அவள் என்ன நினைப்பாளோ என்ற தயக்கத்தால்
கேட்காமல் போவதுமாக அவர் நிலையிருந்தது. வருந்தினார், சோர்ந்தார்,
முறுகினார் இப்படியாக இருந்த தாகூர் ‘நீ என்னுடன் வந்து விடுகிறாயா…’?
என்று கேட்டேவிட்டார்.அவள் உடனடியாகப் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
தாகூருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ‘நான் கேட்டது பிழைதான’; எனத்
தாழ்ந்த குரலில் கூறிவிட்டு பதிலுக்காகக் காத்திருந்தார்.
‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நான் இன்று கட்டாயம் வீட்ட போகவேணும்’
சோர்வாகச் சொன்னாள். அவளுடைய பதிலில் ஆண்களின் மன எண்ணங்கள் பற்றிய
அனுபவம் இருந்தது, சர்வசாதாரணமிருந்தது, மீதமிருக்கும் வாழ்வு பற்றிய
பயமிருந்தது, எல்லாவற்றுக்கும் மேலாக தனிமையின் இயலாமை அவளைத்
தோற்கடித்துக்கொணடிருந்தது……….. ஏன்….?; எதற்கு….? என்றெல்லாம் கேட்கும்
நிலையில் தாகூர் இல்லை…. அவருடைய மூச்சுச் சத்தம் அவளுக்கு நன்றாகக்
கேட்டது. அவரின் உடம்பு வியர்வையால் நனைந்து போய்க்கிடந்தது.
உள்ளங்காலில் இருந்து உச்சந்தலைவரையும் சூடு அனல் பறந்தது.
ஏதோ ஒன்றைச் செய்தாகவேண்டும் என்பது மட்டுமே தாகூரின் முழு எண்ணமாக
இருந்தது. ‘அப்படியென்றால் நான் இன்று உன் வீட்டுக்கு வரட்;டுமா’ என்று
கேட்டார்…? ‘தாராளமாக வாருங்கள்’ என்றாள் அவள். இப்போது தாகூர் அந்தப்
பெண்ணுக்கு ஏதோ ஒரு விதத்தில் உறவுடையவர் போன்றதான உணர்வில் மிதந்தார்.
அந்த மிதப்பில் கர்வம் இருந்திருக்கலாம். வாழ்வின் முழுமைகூட இருக்கலாம்.
அவள் தாகூருடன் அதிகம் பேசுவதுமில்லை, பேசாமல் இருப்பதுவுமில்லை,
தாகூருடைய சில்மிசன்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவுமில்லை ஆனால் அவரைத்
தூண்டும்படி நடந்து கொள்ளவுமில்லை. அவள் ஒரு பெண்ணுக்குரிய பண்புகளுடன்
நடந்து கொள்வது தாகூருக்கு மிகவும் பிடித்திருந்தது. இவளுடனேயே மிகுதிக்
காலத்தைக் கழித்து விடலாம் என்று முடிவு பண்ணிக் கொண்டார்.
‘நீ இரவு என்ன சாப்பாடு செய்து வைத்திருக்கிறாய்..’? என்று கேட்டார்.
அவள் ‘ஒன்றுமில்லை இனித்தான் போய்ச் செய்ய வேண்டும். வீட்டில் ஒன்றும்
போய்ச் செய்வதற்கில்லை. ஏதாவது கடையில் வாங்கிப் போவம் என்றிருக்கிறேன்.’
என்றாள். ‘அப்படியானால் இரண்டுபேரும் கடையிலேயே சாப்பாடு எடுப்போம’;
என்றார் தாகூர். ‘காசுக்கெல்லாம் என்னசெய்கிறாய்’? ‘யாராவது உதவி
செய்கிறார்களா?’ ‘இல்லாவிட்டால் வேலை ஏதாவது செய்கிறாயா’? என அவர்
கேட்டபோது அவள் ‘ஏதோ காலம் போகிறது’ என்று மட்டும் சலிப்புடன் கூறினாள்.
அதற்கு மேல் தாகூர் கேட்கவில்லை. ஏதாவது தவறான பதில் வந்துவிட்டால்
தன்னால் தாங்கமுடியாது என விட்டுவிட்டார்.
சைக்கிள் கல்வியன் காட்டுச் சந்தியை வந்தடைந்தது. ஒரு
குடும்பவத்தவர்களைப்போலவே இருவரும் சைக்கிளை விட்டு இறங்கிப்
பேசிக்கொண்டிருந்தார்கள் இருவருடைய உரையாடல்களும் நீண்ட நாட்கள்
பழகியவர்கள் பேசிக்கொண்டிருப்பது போலவே தோன்றியது. அருகிலிருந்த
சாப்பாட்டுக்கடையின் வெளிச்சத்திலிருந்து பத்தடி தூரம் வரை விலகியே
நின்றார்கள். தாகூர் அவளை சைக்கிளுக்கு அருகில் நிறுத்திவிட்டு சாப்பாடு
வாங்குவதற்குக் கடைக்குச் சென்றார். கடையில் என்ன சாப்பாடு இருக்குதென்று
கேட்டார். கொத்து றொட்டி மாத்திரமே இருந்தது. தாகூர் முன்பெல்லாம் என்ன
சாப்பாடு என்று விசாரிப்பதில்லை. அவர் மனம் தாகூர் இப்போது
குடும்பத்தவராகிவிட்டார் என்பது போலவே இருந்தது. கடையை விட்டு
வெளியேறி அவளிடம் வந்தார். ‘உனக்குக் கொத்துறொட்டி பிடிக்குமா’ என்று
கேட்டார்? அவள் ‘ஆம்’ என்பது போல் தலையாட்டினாள்.
‘முட்டைக்கொத்துறொட்டியா இறைச்சிக்கொத்துறொட்டியா வாங்கட்டும்’ எனக்
கேட்டார்? ‘உங்களுக்கு எது பிடிக்குமோ அதை வாங்கி வாருங்கள்’ என்று
கூறியனுப்பினாள். மனம் துள்ளியது முதுமை ஒரு பொருட்டேயல்லாமல் போனது.
தாகூருக்கு இனி உல்லாம் அவள் தான் என்று முடிவுகட்டிக்கொண்டார்.
றொட்டிகளும்; முட்டைகளும் அதிகமாகச் சேர்த்துச் சாப்பாடு தயாராக்கி;யது.
காலையிலிருந்து சுருட்டுப் பற்றாமையால் வாய் புளிக்கத் தொடங்கியது.
இரண்டு சிகரெட்டுகளை வாங்கி ஒன்றைப் பற்றவைத்துக் கொண்டு மற்றையதை
பொக்கற்றுக்குள் போட்டார். தாகூர் ஒருநாளுமில்லாது இன்று சிகரெட்
பற்றுவதை கடைக்காரர் கிண்டல் பண்ணிக்கொண்டே கொத்துறொட்டியைக் கொடுத்தார்.
புதுக்குடும்ப வாழ்வு பற்றியே மனம்யோசித்தது. அதற்காக மனம் தவித்தது.
தாகூர் சைக்கிளை நோக்கி விரைவாக நடந்தார். வெளிச்சத்தில் இருந்து
இருட்டுக்குள் வந்தவுடன் ஒன்றும் தெரியவில்லை. கண்ணைச் சுருக்கியவாறு
உற்றுப்பார்த்தார். சைக்கிள் நின்றது. அந்தப் பெண்ணைக் காணவில்லை.
சுற்றும் முற்றும் பார்த்தார் ஒருவரையும் காணவில்லை. அருகில் இருந்த
ஒழுங்கைக்குள் யாரோ நிற்பதுபோலத் தெரிந்தது. அருகில் சென்று பார்த்தார்.
அது வேறு யாரோ என்பது தெரிந்தது….. மீண்டும் கடைப் பக்கம் சென்று
பார்த்தார் அங்கும் இல்லை. சைக்கிளுக்கு முன் பக்கம் வந்து பிள்ளை…பிள்ளை
என்று கூப்பிட்டுக்கொண்டே அருகில் இருந்த பெற்றோல் கடைப்பக்கம் வேகமாக
நடந்தார். தாகூருக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒரு வேளை வேறு யாராவது
அவளை……சீ அப்படியிருக்காது. இவர் தேடிய எந்த இடத்திலும் அவள் இல்லை.
எங்கு போயிருப்பாள்? சில நேரம் ஓடியிருப்பாளோ? ஏன் ஓட வேண்டும்?
தாகூருக்கு ஒரே குழப்பமாக இருந்தது. நன்றாகத்தானே என்னுடன் வந்தவள்.
வீட்ட போட்டாளோ? சைக்கிளை எடுத்துக் கொண்டு செம்மணிப் பக்கம் வேகமாக
ஓடினார். நீண்ட தூரம் சென்று பார்த்தும் அவள் இல்லவேயில்லை. ஒரு வேளை
அருகில் எங்காவது போயிருந்து திரும்பி வந்து
என்னைத்தேடிக்கொண்டிருப்பாளோ? என்று நினைத்த தாகூர் உடனடியாகச்
சைக்கிளைத் திருப்பினார்.மீண்டும் அலுப்பும் வேதனையும் உடம்புக்குத்
திரும்பியது. மூச்சு வாங்க ஓடிவந்து அவளை விட்டுப்போன அந்த இடத்தில்
பார்த்தார். இல்லை..இல்லை..இல்லை.
அவரால் எதைப்பற்றியும் சிந்திக்க முடியவில்லை. சைக்கிளைக் கடையோரமாகச்
சாத்தி விட்டு அடுத்த சிகரெட்டையும் மூட்டினார். மனம் தேடு… தேடு என்று
விரட்டியது. அவரால் இந்த இருட்டில் தேடமுடியுமா? எங்குதான் போய்த்
தேடுவது. தாகூர் நம்பினாரே. அவளைக் கடைசிவரை மோசமானவள் என்று மனம்
நினைக்கவில்லையே. அவளிடம் இரக்கமும் அன்பும் ஆதரவும் கிடைக்கப்போகிறது
என்று நம்பினாரே. முட்டாள்த் தனமான நம்பிக்கை. எத்தனை வகையான மனிதர்கள்
இந்த உலகில் இருக்கிறார்கள். தாகூருக்குக் கத்தி அழவேண்டும் போன்று
இருந்தது. நீண்ட நேரம் அந்த இடத்திலேயே நின்றிருந்தார். திடீர் என்று
சாராயக் கடை நினைவு தோன்றவே சைக்கிளைத் திருநெல்வேலிப்பக்கமாக உருட்டத்
தொடங்கினார். யாரோ பின்புறமிருந்து ஐயா என்று கூப்பிடுவது போலக் கேட்டது.
திரும்பிப் பார்த்தார். தாகூருக்கு அந்த இருட்டை விட உலகம் இருளாய்த்
தெரிந்தது, மனிதர்கள் இருளாய்த் தெரிந்தார்கள். தாகூர் நீண்ட
நாட்களாகியும் அதே இடத்தில் நிற்கிறார்.
முற்றும்

0 comments:

Post a Comment