‘எவ்வளவுக்கு ஒரு படைப்பு வாசகனுடைய பங்கீட்டைக்கேட்கிறதோ அவ்வளவுக்கு அந்தப் படைப்பு உயர்ந்து நிற்கிறது. ஓர் உன்னதமான இலக்கியம் உண்மையில் வாசகனாலேயே பு+ர்த்திசெய்யப்படுகிறது.’ என அ.முத்துலிங்கம் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இந்தக்குறிப்பிடலின் அடிச்சுவையை மிக எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும். நான் நினைக்கிறேன் வாசகருக்கு இதைவிடப் பெரிய ஓர் பொறுப்பையும் கௌரவத்தையும் படைப்புணர்களால் வழங்கமுடியாது. “ ‘வாசிப்பு’ எனும் சொல்; அது கொண்டிருக்கக்கூடிய இயங்கியலை இன்று இழந்துகொண்டே வருகிறது. எழுத்தர்களின் இயக்கம் விரிந்திருக்கும் அளவிற்கு வாசகத்தளம் விரிவுபடவில்லை. அல்லது வாசிப்புச் செயற்பாட்டை வாசகர்கள் நிராகரித்துப் பிறிதோர் ஊடகத்திற்கு அவர்கள் தங்களை மாற்றமுனைகிறார்கள்.” என்னும் வகையான ஓர் குற்றச்சாட்டும் இன்று பலமாக உரையாடப்பட்டு வருகிறது. இந்தத் தொடரின் நோக்கம் எதுவெனில் ‘வாசிப்பு’ என்பது வெறுமனே எழுத்துக்களைப் படிக்கப் பயன்படும் சொல் மாத்திரம்தானா? மற்றும் வாசகர்கள்; நூல்ககளைப் படிப்பதைத் தவிர்த்து வேறு ஓர் ஊடகத்திற்குள் நுழைகிறார்களாயின் ஒரு கருத்தை சமூகமயமாக்க இனிப் பல்வேறு ஊடகங்களைக் கண்டடைய வேண்டிய அவசியம் தோன்றியுள்ளதா? என்னும் விடயங்களைப் பற்றிய ஓர் குறிப்பை முன் வைப்பதோடு மாற்றுச் சிந்தனைகளையும் அது எதிர்பார்க்கின்றது.
ஒரு வாசக நண்பர் கேட்டார் எழுத்தர்கள் எனும் சொற்பதம் இன்று பொருத்தமாகப் பிரயோகிக்கப் படுகிறதா? ஏனெனில் அதிகமானோர் எழுத்துத் தட்டர்களாகத்தானே இருக்கிறார்கள், காலப்போக்கில் இவர்கள் எழுத்துச் சொல்லிகளாகவும் எழுத்து நினைஞர்களாகவும் மாறக்கூடும். இலகுவான வழிமுறைகளைக் கண்டடைவது எல்லோருக்கும் பொதுவானவிடயம்தானே? வாசகர்கள் மீதுமட்டும் ஏன் குற்றம் சுமத்துகிறார்கள்? இவர்கள் ஏன் கருத்துக்களைச் சொல்ல வேறுவிதமான ஊடகங்களைத்தெரிவு செய்யக்கூடாது? இந்தக் கேள்விகள் ஒரு வகையில் நகைப்பிற்கிடமானவையாக இருந்தாலும் சிந்திக்க வேண்டிய தேவையுமுள்ளது.
அசைவு-ஒலி-கோடு-போன்ற ஊடகங்களுக்கு அடுத்தபடியாகவே எழுத்து எனும் ஊடகம் மனிதவாழ்வில் முக்கியம் பெறுகின்றது. இதுவே மனிதநாகரித்தின் மிக முக்கியமான திருப்புமுனையாகவும் விளங்கியது எனலாம். இவைகளுக்குப் பின்னர் மனிதனின் அறிவாற்றலால் உருவான ஊடகங்கள் எண்ணற்றவை. இன்று பரந்த உலகைச் சுருக்கி நாம் நினைக்கும் கணத்தில் விரும்பியதை அறிந்துகொள்ளவும் வேற்றுக் கிரகத்திற்குச் சென்று கிரக வாசிகளின் மனநிலையைப் புரிந்துகொள்ளவும் அதையும் தாண்டி அவர்களுடைய மொழியை மொழியாக்கம் செய்யவும் அறிவிசங்கள் முன்னேறி வந்திருக்கின்றன. ஆனாலும் எழுத்துப் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் தனக்கான வதித்தலை ஓர் நிச்சயத் தன்மையோடு; நிலைநிறுத்தி இயங்கி வருகின்றபோதும் ‘வாசிப்பு’ எனும் சொற்பதம் எழுத்துக்களின் சுட்டுக்களுக்கு அப்பால் சென்றுவிட்டதென்றே எண்ணத் தோன்றுகிறது. ‘வாசிப்பு’ என்பது அறிவிசங்களின் வேக மாற்றத்தை உள்வாங்கி பல பகுதிகளாகி விட்டன. வெறுமனே நூல்களின் எழுத்துக்ககளைப் படித்தல் என்பது பொது வாசிற்புக்குள் அடங்கும் ஒரு மிகச்சிறிய பகுதியாக மட்டுமே பார்க்கப்படவேண்டும். இன்னும் சொல்லப்போனால் சிறு புள்ளியாக அது மாறிவிட்டது. ஆதலால் நூல்வழிப் படித்தறிதல் நிலை காலமாகும் ஒரு செயற்பாடாகவே கருதக்கிடக்கிறது. ஏனெனில் கற்கைமுறைகள் தம் செயற்பாட்டைப் பெரியளவில் மாற்றிவிட்டன. தவளைக்கத்தல் கற்கை, செயல்முறைக்கற்கை, சற்றலைற்கற்கை, மாற்றவுலகை அவதானிக்கும் படக்கணினிக்கற்கை முறை ஆகியவை இன்றைய உலகின் பிரதான போக்காக மாறிவிட்டன.
‘வாசிப்பு’ என்பதை நாம் எந்த முறையில் புரிந்து வைத்திருக்கிறோம் என்பது மிகப்பிரதானமான கேள்வி? ஏனெனில் நம்மில் பலர் அதை ‘நூலில் உள்ளதைப் படித்தலே வாசிப்பு’ என்ற அளவிலேயே புரிந்து வைத்திருக்கிறோம். இந்த வரையறை மிகப் பலவீனமானதாகும். வாசிப்பு எனும் சொற்பதத்துள் படித்தல்-கற்றல்-உரையாடுதல்-விமர்சித்தல்-மௌனமாயிருத்தல்-புரிந்துகொள்ளல்-உருவாக்கல்-மீள்உருவாக்கல்-ஆய்தல்-அறிதல்-தவிர்த்தல்-நினைதல் என்பவற்றைப் பிரதானமாகக் கொண்டு பல்வேறு கூறுகள் உள்ளடங்கியிருப்பதாக நவீன மொழியியல் கருதுகின்றது. வாசிப்பு என்பதை ஓவியமாகக் கொண்டால் ஏனைய கூறுகள் அதன் புள்ளிகளாகும்.
நாம் எமது மொழியை எந்தளவிற்குப் பிற்போக்குத் தனமாக அணுகிக் கொண்டிருக்கிறோமோ அந்தளவிற்கு எமது ஏனைய துறைகள் பின்தங்கியிருப்பது தவிர்க்கமுடியாததாகிவிடும். எழுத்து எனும் குறிப்பானால் உருவாக்கப்படும் கருத்தாக்கங்கள் நிச்சயமற்றவை, சந்தேகம் கொள்ளவேண்டியவை. மற்றும் நூல்வழிஎழுத்துக்களைப்படித்தல் என்பது நேரவிரயத்தையும் சோர்வுத்தன்மையையும் அதிகரிக்கிறது.ஊடகங்களின் பெருக்கம் நூல்வழிக் கற்போரின் விகிதாசாரங்களைப் பலமாகத் தாக்கிச் சிதைத்துவிட்டது. இனி எவ்வாறு முயன்றாலும் இந்த விகிதாசாரத்தை அதிகரிப்பது சாத்தியமற்றதாகும். இதற்கு மாற்று வழியைக் கண்டடைதலே புத்தியான கருத்தமைவாகவும் இருக்கும்.
ஆதலால் எழுத்தர்கள் தமது குறிப்பிட்ட ஒரு விடயத்தை நிறுவுவதற்குப் பல்வேறு ஊடகங்களைத் தெரிவு செய்ய வேண்டும். அதாவது ஒரு நாவல் உயிராகவும்-சடமாகவும்-கலையாகவும்-அறிவியலாகவும் தன்னைப் பல நிலைகளில் வாசிப்புக்குள்ளாக்க வேண்டும். அது எழுத்தாக-ஓவியமாக-விவாதமாக-நாடகமாக-குறும்,பெரும் திரையாக இருப்பதோடு கணினிப் பதிவாகவும் வேண்டும். ஒரு கருத்தின் திணிவு அறிவியல் சார் அம்சங்களுடன் தனது கலையடைவை நோக்கி நகர்கின்றபோது தனக்குள் ஓர் வாசிப்பும் புறநிலையில் வேறு ஓர் வாசிப்பும் கொண்டிருக்குமானால் பயனாளிகளின் வகைப்பும் தொகைப்பும் எழுத்தர்கள் விரும்பும் நிலையை எட்டக்கூடும். ஆனால் இதன் சாத்தியப்பாடு கேள்விக்குரியதாகும்.
(தொடரும்)
0 comments:
Post a Comment