Wednesday, September 14, 2011

புனைவுப்பாம்பின் வருகை


நீங்கள்
நின்ற இடத்திலிருந்து அகன்ற விதம்
மிகச் சாதாரணமானது ஆகையால்
நான் அச்சப்படாமைக்குக் காரணம் இருக்கிறது

சற்று முன்னர்தான்
உங்கள் புனைவுப் பாம்பு என்னுள் புகுந்திருக்க வேண்டும்
தன்னால் முடிந்தளவு வரைக்கும்
அது தன் விடத்தை என்னுள் கொட்டித் தீர்த்து விட்டது

இப்போது புனைவுப் பாம்பின் பயணம்
தாகம் கொண்டு மலையேறுகிறது

அகப்பட்ட கடவுளர்களைக்கூடத் துரத்துகிறது
உங்கள் பாம்பின் விடம் நீலம் இல்லை
சுத்த வெண்மை
நிறைந்த சமாதானம்போன்றது அது

நான் தனித்த அறையிலிருந்து யோசிக்கத் தொடங்குகிறேன்

சுற்றியுள்ள பொருட்களிளெல்லாம் பரவியிருக்கிறீர்கள்
நீங்கள் முனிவரும் இல்லை
கடவுளரும் இல்லை

திறந்திருந்த சாளரம் வழியே
ஒரு விருந்தினன் போன்று என்னிடம் வந்தவர் நீங்கள்

தொங்கிக் கொண்டிருக்கும் தூக்குக் கயிற்றின் முன்னால்
இப்போது என் தலை தயாராகிக் கொண்டிருக்கிறது.

0 comments:

Post a Comment