Tuesday, October 11, 2011

டோமஸ் ட்ரான்ஸ்ட்ருமர் கவிதைகள்


காலைப்பறவைகள்


காரை நான் உயிர்ப்பிக்கிறேன்.

முன்கண்ணாடிகளில் மகரந்தம் படிந்தகாரை.

என் கருங்கண்ணாடிகளை அணிந்து கொள்கிறேன்.

பறவைகளின் பாட்டு இருள்கிறது.


இதற்கிடையே மேலும் ஒருவன் ரயில்நிலையத்தில்

பத்திரிக்கை வாங்குகிறான்.


துருப்பிடித்து சிவந்து

வெய்யிலில் தகித்து நிற்கும்

பெரிய கூட்ஸ் வாகனுக்கு அருகில்

இங்கெங்குமே வெற்றிடம் இல்லை

வசந்தத்தின் கதகதப்பினூடே குளிர்ந்த பாதை

அதில் ஓடிவரும் ஒருவன்

அவனை தலைமை அலுவலகத்தில் எப்படி

பழி சுமத்தினார்கள் என்று சொல்கிறான்.


பின்வாசல் வழியாகவரும் மெக்பை*

கருப்பும் வெள்ளையுமாய்,நரகத்தின் பறவை.

அந்தக் கரும்பறவை முன்னும்பின்னும் விரைகிறது,


அனைத்தும் ஒருகரித்துண்டு ஓவியமாகும்வரை

கொடியில்ஆடும் வெண்ணிற ஆடைகளைத் தவிர்த்து:

ஒரு பாலஸ்ரினா கூட்டிசை*

இங்கெங்குமே வெற்றிடம் இல்லை

அதிஅற்புதமான உணர்வு

என் கவிதைவளரும் பொழுது

நான் சுருங்கியபடி இருப்பது.

அது வளர்கிறது என்இடத்தை எடுத்துக்கொள்கிறது.

அது என்னைப்புறம் தள்ளுகிறது.

அது என்னை கூட்டிலிருந்து வெளியே எறிகிறது.

கவிதை தயாராகிவிட்டது.

மெக்பை* ‍‍- காகம் போன்றொரு பறவை

பாலஸ்ரினா கூட்டிசை* ‍- palestrina chorus


ஏப்ரலும் மெளனமும்(April and Silence )


வசந்தம் வெறிச்சோடிக்கிடக்கிறது.

வெல்வட் கருப்பு வாய்க்கால்

என‌தோரம் ஊர்ந்துசெல்கிறது

எதையும் பிரதிபலிக்காமல்

ஓளிரும்அனைத்தும்

மஞ்சள் மலர்களே

நான் எனது நிழலுள்

எடுத்துச் செல்லப்படுகிறேன்

கருப்புப்பெட்டியில் கொண்டுசெல்லப்படும்

வயலினைப் போல

நான் சொல்லவிரும்பும் ஒரேவிஷயம்

கைக்கெட்டாமல் ஒளிர்கிறது

அடகுக்கடை வெள்ளியைப் போல.


சூரியன்கள் உள்ள நிலப்பரப்பு(Landscape with Suns)

சூரியன் வீடுகளுக்குப்பின்னிருந்து வெளிப்படுகிறான்.

நடுவீதியில் நின்றுகொண்டு

நம்மீது மூச்செறிகிறான்

தன் சிவந்த காற்றாய்.

இன்ஸ்ப்ருக்* ,நான் விடைபெற வேண்டும்.

ஆயினும்

நாளை ஒரு ஒளிரும்

சூரியன் இருக்கும்

நாம் உழைத்து உயிர்வாழும்

பழுப்புநிற

பாதி இறந்த

கானகத்தில்

இன்ஸ்ப்ருக்* - மேற்கு ஆஸ்திரிய மலைவாசஸ்தலம்.


இடைகுளிர்காலம்(Midwinter)


என் உடைகளிலிருந்து

நீலநிற வெளிச்சம் ஒளிர்கிறது

இடைகுளிர்காலம்

பனிக்கட்டிகளின் டாம்பொரின்* சடசடப்பு

கண்களை மூடிக்கொள்கிறேன்

அங்கொரு நிசப்த உலகுண்டு

இறந்தவர்கள் எல்லைதாண்டி கடத்தப்படும்

ஒரு விரிசல் இருக்கிறது

டாம்பொரின்* கஞ்சிரா போன்றது

2011 ஆம் வருடத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஸ்வீடிஷ் கவிஞர் டோமஸ் ட்ரான்ஸ்ட்ருமர் எழுதிய இக் கவிதைகளை கார்த்திக் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்திருக்கிறார்.

நன்றி-ஜெயமோகன்.

0 comments:

Post a Comment